மொபைல் இயங்குதளமான ஆண்ட்ராய்டு இன்று முன்னணியில் இருக்கிறது. இதை உருவாக்கி, வளர்த்து விட்டது கூகுள்தான். ஆனால், ஆண்ட்ராய்டை அடிப்படையாக வைத்து, அதில் தன் சொந்த மாற்றங்களை செய்து பிற மொபைல் நிறுவனங்களுக்கு தரக்கூடிய நிறுவனம் சையனோஜென்.
அமெரிக்காவிலிருந்து இயங்கும் இதன் நிறுவனர்களில் கவுசிக் தத்தா என்ற இந்தியரும் உண்டு. சமீபகாலமாக கூகுள் சாராத ஆண்ட்ராய்டை வளர்த்தெடுப்போம் என்று சையனோஜென் சவால் விட்டிருக்கிறது. சொல்லப்போனால், 'கூகுளின் தலையில் ஒரு தோட்டாவை பாய்ச்சும்' விதத்தில் சையனோஜெனை செம்மைப்படுத்துவோம் என்று சொல்லி வருகின்றனர் அதன் நிறுவனர்கள்.
இந்தியாவில் சாம்சங்கிற்கே சவால் விடுக்குமளவுக்கு விற்பனையில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் மைக்ரோமேக்ஸ் மொபைல் நிறுவனம்
சையனோஜென் இயங்கு தளத்தையே தன் மொபைலுக்கு பயன்படுத்தி வருகிறது.
கூகுளுக்கு எதிராக கொடிபிடிப்பதால், ட்விட்டர் நிறுவனம், மீடியா முதலை ரூபர்ட் மர்டாக் போன்ற பல பெருந்தலைகள், சையனோஜெனில் பல லட்சம் டாலர்கள் முதலீடு செய்திருக்கின்றனர். சமீபத்தில் இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனங்களுள் ஒன்றான விப்ரோவின் அதிபர் அசிம் பிரேம்ஜியும் இதில் முதலீடு செய்திருக்கிறார். எத்தனை தெரியுமா, 8 கோடி டாலர்கள்.
'ஆண்டிராய்டை ஒரு நிறுவனத்தின் பிடியில் சிக்கவைக்காமல், அதை திறந்துவிட்டு, உலக அளவில் மட்டுமல்ல, உள்நாட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கும் அவர்களது திட்டம் எங்களுக்கு பிடித்திருக்கிறது என்பதால்தான் சையனோஜெனில் முதலீடு செய்தோம்' என்கிறார் பிரேம்ஜி இன்வெஸ்ட் என்ற அமைப்பின் அதிகாரியான சந்தோஷ் பட்நாம்.
No comments:
Post a Comment