புதுடில்லி : நாட்டிலேயே மிக அதிக அளவில் வருமான வரி செலுத்தாமல் இருக்கும் 31 பேரின் பட்டியலை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது. இவர்கள் மட்டும் ரூ.1500 கோடிக்கு மேல் வரி கட்டாமல் அரசை ஏமாற்றி உள்ளது இதன் மூலம் தெரிய வந்துள்ளது. அதிக அளவில் வருமான வரி அல்லது கார்ப்பரேட் வரி செலுத்தாமல் வைத்திருக்கும் நிறுவனங்களில் ஐதராபாத்தை சேர்ந்த டோடெர்ம் இன்ப்ராஸ்டிரக்சர் (ரூ.401.64 கோடி), புனேவைச் சேர்ந்த பதிஜா பிரோஸ் புரோஜிங் அன்ட் ஆட்டோ பார்ட்ஸ் உற்பத்தி கழகம் ( ரூ.224.05 கோடி), ஐதராபாத்தைச் சேர்ந்த ராயல் பேப்ரிக்ஸ் (ரூ.158.94 கோடி), மும்பையைச் சேர்ந்த ஹோம் டிரேட் (ரூ.72.18 கோடி) உள்ளிட்டவைகள் முக்கியமானவைகளாகும்.
இந்த பட்டியலில் உள்ள பலரையும் தொடர்பு கொள்ள முடியாமல் உள்ளதால், வரி பாக்கி உள்ளவர்கள் உடனடியாக செலுத்த வேண்டும் எனவும் இணையதளம் மூலமாக வருமான வரித்துறை கேட்டுக் கொண்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் வருமான வரித்துறை வெளியிட்ட, அதிகம் வரி செலுத்தாதவர்களின் 2வது பட்டியல் இதுவாகும். ஏற்கனவே வெளியிட்ட 18 பேர் கொண்ட பட்டியலில் இடம்பெற்றவர்கள் ரூ.500 கோடி வரை வருமான வரி செலுத்தாமல் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகம் வருமான வரி செலுத்தாதவர்களின் பட்டியலை வெளியிட்டு வருவதற்கான காரணம் குறித்து வருமான வரித் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், இது போன்று அதிகம் வரி ஏய்ப்பு செய்பவர்களின் பெயர்கள் அல்லது அவர்களின் நிறுவன பெயர்கள் வெளியிடப்பட்டால் சாமானிய மனிதர்கள் வருமான வரித்துறைக்கு தானாக உதவ முன்வருகிறார்கள் என தெரிவித்துள்ளார். சமீபத்தில் பார்லி.,யில் அரசு தரப்பில் வெளியிடப்பட்ட புள்ளி விபரத்தின்படி 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் சுமார் ரூ.3,11,080 கோடி ரூபாய் வருமான வரி வசூலிக்கப்படாமல் உள்ளது.
No comments:
Post a Comment