Wednesday, 22 April 2015

மாநில நிதி அமைச்சர்களை சந்திக்கிறார் ஜேட்லி 

 

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) குறித்து விவாதிக்க மாநில நிதி அமைச்சர்களை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று சந்திக்க இருக்கிறார். அதிகாரம் அளிக்கப்பட்ட மாநில நிதி அமைச்சர் குழுவுடன் கலந்து ஜேட்லி விவாதிக்க இருக்கிறார். அதன் பிறகு மாநில நிதி அமைச்சர்கள் தங்களுக்குள் விவாதிப்பார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மசோதா கடந்த டிசம்பரில் மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. நடப்பு கூட்டத்தில் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. சில மாநிலங்கள் சரக்கு மற்றும் சேவை வரி தங்களுக்கு பாதகமாக இருக்கும் என்று எதிர்க்கிறார்கள்.
அதிகாரம் அளிக்கப்பட்ட மாநில நிதி அமைச்சர் குழுவின் தலைவர் கே.எம். மாணி சரக்கு மற்றும் சேவை வரி அடுத்த ஆண்டு அமல்படுத்தப்படும் என்றும், அதற்கு முன்பாக அனைத்து மாநிலங்களிடையே கருத்தொற்றுமை ஏற்படுத்தப்படும் என்று கடந்த மாதம் தெரிவித்தார்.
ஜிஎஸ்டியை அமல்படுத்தும் பட்சத்தில் நாட்டின் ஜிடிபி 1 முதல் 2 சதவீதம் வரை உயரக்கூடும் என்று ஜேட்லி தெரிவித்தார்.
ஜிபிஎப் வட்டி விகிதம் 8.7 சதவீதம்
நடப்பு நிதி ஆண்டில் பொது வைப்பு நிதி (ஜிபிஎப்) உள்ளிட்ட இதர திட்டங்களுக்கான வட்டி 8.7 சதவீதமாக மத்திய அரசு நிர்ணயம் செய்திருக்கிறது. மத்திய அரசு, ரயில்வே, பாதுகாப்பு துறை ஊழியர்களுக்கு இது பொருந்தும்.
இது கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. நடப்பு நிதி ஆண்டில் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியும் 8.7 சதவீதமாக மத்திய அரசு நிர்ணயம் செய்திருக்கிறது. ஆனால் மத்திய அரசின் இதர சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு உயர்த்தி இருக்கிறது.
மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்துக்கான வட்டி 9.2 சதவீதத்தில் இருந்து 9.3 சதவீதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டமான சுகன்யா சம்ரிதி திட்டத்துக்கான வட்டி 9.1 சதவீதத்தில் இருந்து 9.2 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
கிஸான் விகாஸ் பத்திரத்துக்கான வட்டி 8.7 சதவீதமாக தொடர்கிறது.
குரூப் ஏ பிரிவில் இருந்து டிஎல்எப் வெளியேற்றம்
மும்பை பங்குச்சந்தையின் குரூப் ஏ பிரிவில் இருந்து டிஎல்எப் பங்கு வெளியேறுகிறது. அதேபோல ரசோயா புரோட்டீன்ஸ் நிறுவன பங்கும் இந்த பிரிவில் இருந்து அடுத்த மாதம் முதல் வெளியேறுகிறது.
மாறாக யுனைடெட் ஸ்பிரிட்ஸ் மற்றும் ஜேகே டயர் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் குரூப் ஏ பட்டியலில் இணைகின்றன. குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை இந்த பட்டியல் மாற்றி அமைக்கப்படும். வரும் மே மாதம் 4-ம் தேதியில் இருந்து குரூப் ஏ பிரிவில் மாற்றம் இருக்கும் என்று பிஎஸ்இ தெரிவித்துள்ளது. குரூப் ஏ பிரிவில் 300 பங்குகள் இருக்கின்றன. குரூப் பி பிரிவில் 3,000 பங்குகள் இருக்கின்றன.
பங்குகளின் சந்தை மதிப்பு, வர்த்தகமாகும் பங்குகளின் எண்ணிக்கை, லாபம், டிவிடெண்ட், நிறுவனர்களின் பங்கு விகிதம் உள்ளிட்ட பல விஷயங்களை அடிப்படையாக கொண்டு பிரிவுகள் வகைபடுத்தப்படுகின்றன.

 

No comments:

Post a Comment

E-Duke bike launch confirmed