Tuesday, 21 April 2015

Dinamalar Banner Tamil News



புதுடில்லி: சமீபகாலமாக, நாடு முழுவதும் தங்கம் கடத்தல் அதிகரிப்பதால் மத்திய அரசு கவலை அடைந்துள்ளது. கடந்த நிதியாண்டில் மட்டும், 1,000 கோடி ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மற்ற நாடுகளை விட, நம் நாட்டில் தான் தங்கத்துக்கான நுகர்வு அதிகமாக உள்ளது. இதனால், பிற நாடுகளில் இருந்து, நம் நாட்டுக்கு தங்கம் கடத்தப்படுவது அதிகரித்துள்ளது.

தாய்லாந்து, சுவிட்சர்லாந்து, துபாய், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளின் சந்தைகளை ஒப்பிடும்போது, நம் நாட்டில் தங்கத்தின் விலை அதிகம். இந்த நாடுகளில் இருந்து சட்டப்பூர்வமாக தங்கத்தை கொண்டு வந்தால், சுங்க வரி உள்ளிட்ட பிற செலவுகள் மிகவும் அதிகரித்து விடும்.இதனால், வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை கடத்தி வந்து, இங்கு அதிக விலைக்கு விற்கின்றனர். சர்வதேச சந்தையில், 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை வெளிநாடுகளில் இருந்து கடத்தி வந்து, இங்கு, 1 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்வதாகக் கூறப்படுகிறது. நம் நாட்டை பொறுத்தவரை, சென்னை, திருவனந்தபுரம், மும்பை, டில்லி போன்ற விமான நிலையங்களில் தான், கடத்தல் தங்கம் அதிகமாக பிடிபடுகிறது. இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், துபாயிலிருந்து, டில்லிக்கு வந்த முகமது மற்றும் குலாப் அன்வர் ஆகிய இரண்டு பேரிடம், விமான நிலையத்தில் இருந்த சுங்கத்துறை அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். அப்போது, அவர்களிடமிருந்து, 6 கோடி ரூபாய் மதிப்புள்ள, 21 கிலோ தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. சமீபகாலங்களில் விமான நிலையங்களில் பிடிபட்ட கடத்தல் தங்கத்தில், இதுவே அதிக மதிப்புள்ளது என, சுங்கத் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, கடந்த நிதியாண்டில், ஜனவரியுடன் முடிந்த காலத்தில், 1,000 கோடி ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கம், நாடு முழுவதும் பிடிபட்டுஉள்ளதாக சுங்கத் துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.





இதுகுறித்து, சுங்கத்துறை வட்டாரங்கள் கூறியதாவது:கடந்த நிதியாண்டில் (2014 - 15),தங்கம் கடத்தல் தொடர்பாக, 3,412 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 1,000 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் பிடிபட்டுள்ளது. 2013 - 14ல், 2,450 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அப்போது, 686 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் பிடிபட்டது. 2012 - 13ல், 900 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், 104 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆண்டுக்கு ஆண்டு தங்கம் கடத்தல் அதிகரித்து வருவதால், இதை தடுப்பதற்கு அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளது. இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

சென்னையில் 1.6 கிலோ பறிமுதல்:
* சிங்கப்பூரில் இருந்து, 'டைகர் ஏர்லைன்ஸ்' விமானம் சென்னை வந்தது. இதில் வந்த, திருச்சி துறையூரைச் சேர்ந்த அமீனா சிக்கந்தர், 43, என்ற பெண்ணின் உடைமைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, 1.3 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
*துபாயில் இருந்து, 'எமிரேட்ஸ்' விமானத்தில் வந்த, சென்னை பிராட்வேயைச் சேர்ந்த பன்னீர்செல்வம், 52, சேகர், 28, ராமுலு, 32, ஆகியோரிடம் இருந்து, 950 கிராம் தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
* மலேசியாவில் இருந்து வந்த, 'மலேசியன் ஏர்லைன்ஸ்' விமானத்தில் வந்த கண்ணன், 50, என்பவரின் ஆசனவாயில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, 250 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.மூன்று சம்பவங்களும், நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்தவை. மொத்தம், 2.5 கிலோ எடையிலான, 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக, ஒரு பெண் உட்பட, ஐந்து பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.

இறக்குமதி வரி காரணம்:
இந்தியாவில், ஓர் ஆண்டிற்கு தங்கத்திற்கான தேவை, 850 டன் என்ற அளவில் உள்ளது. உள்நாட்டில், தங்கம் உற்பத்தி குறைவாக உள்ளதால், துபாய், லண்டன், சுவிட்சர்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. தங்கம் இறக்குமதிக்கான உரிமம் வைத்துள்ள ஆபரண வர்த்தகர்கள், வங்கிகள் மூலம் தங்கத்தை வாங்கி, ஆபரணங்களாக மாற்றி, நகைக் கடைகளில் விற்பனை செய்கின்றனர்.சர்வதேச அளவில், லண்டனில் உள்ள ஆபரண சந்தையில், தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதை பின்பற்றி, அனைத்து நாடுகளிலும், நாள்தோறும், தங்கம் விற்கப்படுகிறது. இந்தியாவில், சர்வதேச விலையோடு, இறக்குமதி வரி, மதிப்பு கூட்டு வரி, வங்கி கமிஷன் ஆகியவற்றுடன், விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. மும்பை, கோல்கட்டா, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களைக் காட்டிலும், சென்னையில் ஆபரண தங்கம் விலை குறைவாக உள்ளது.இதற்கு, கடத்தல் தங்கம் வருகை காரணம் எனக் கூறப்படுகிறது. தங்கம் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதை அடுத்து, சென்னைக்கு அதிகளவில் தங்கம் கடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. தங்கம் கடத்தும், 'குருவி'க்கு, தங்கத்தை கடத்தி வர, வெளிநாடு சென்று வரும் டிக்கெட் இலவசமாக தரப்படுகிறது.மேலும், இவர்களுக்கு தங்குமிடம், வாங்கும் தங்கத்துக்கு பணம், வரி ஆகிய அனைத்தையும் ஏஜென்ட்கள் கொடுத்து அனுப்புகின்றனர். விமான நிலையத்தில், இங்குள்ள ஏஜென்ட்கள் அவர்களிடம் தங்கத்தை வாங்கி செல்கின்றனர்

No comments:

Post a Comment

E-Duke bike launch confirmed