Tuesday, 6 May 2014

கடலில் மூழ்கிய மலேசிய விமானத்தை தேட அதிநவீன சாதனங்களை வாங்க முடிவு



கான்பெர்ரா,
239 பயணிகளுடன் கடலில் மூழ்கிய மலேசிய விமானத்தை தேடுவதற்கு அதிநவீன சாதனங்களை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
விமானம் கடலில் மூழ்கியது
கடந்த மார்ச் மாதம் 8–ந்தேதி மலேசியாவில் இருந்து சீன தலைநகர் பீஜிங்கிற்கு 239 பயணிகளுடன் புறப்பட்டுச்சென்ற எம்.எச்.370 போயிங் ரக விமானம் இந்திய பெருங்கடலின் தெற்கே கடலில் விழுந்து மூழ்கியது. இந்த விமானத்தில் 5 இந்திய பயணிகளும், 154 சீன பயணிகளும் இருந்தனர். இந்த விமானத்தின் நொறுங்கிய பாகங்களோ, அதில் பயணம் செய்தவர்களின் உடல்களோ இதுவரை கிடைக்கவில்லை. மேலும் விமானத்தின் கறுப்பு பெட்டியும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இதனால் விமானத்தின் கறுப்பு பெட்டியை தேடும் முயற்சியில் ஆஸ்திரேலியாவின் ஆங்குஸ் ஹவுஸ்டன் என்பவரது தலைமையிலான குழுவினர் நவீன சாதனங்களுடன் ஈடுபட்டனர். சீன போர் விமானங்களும், கப்பல்களும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டன. எனினும் 2 மாதங்களாகியும் மாயமான விமானம் குறித்து எந்த உருப்படியாக தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.
துணை பிரதமருடன் சந்திப்பு
இந்த நிலையில் தேடுதல் குழுவின் தலைவர் ஆங்குஸ் ஹவுஸ்டன், மலேசியா பாதுகாப்பு மந்திரி ஹிஷாமுத்தீன் ஹுசைன் சீன போக்குவரத்துதுறை மந்திரி யாங் சூங்டாக் ஆகியோர் ஆஸ்திரேலிய தலைநகர் கான்பெர்ராவில் அந்நாட்டின் போக்குவரத்துதுறை மந்திரி வாரன் டிரஸ்சை  சந்தித்தனர். அப்போது அவர்கள் கடந்த 2 மாதங்களில் நடந்த தேடுதல் பணி குறித்தும், அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்பது பற்றியும் தீவிரமாக ஆலோசனை நடத்தினர். இதன் பிறகு டிரஸ் கூறியதாவது:–
அதிநவீன சாதனங்கள் வாங்க முடிவு
மலேசிய விமானத்தை ஆழ்கடலில் தேடும் பணி தொடர்ந்து நடத்தப்படும். ஏனெனில், ஆழ்கடலில் இன்னும் பல மைல்கள் தூரத்திற்கு தேடிப்பார்க்கவேண்டி உள்ளது. குறிப்பாக கடல் படுகையின் பெரும்பகுதியை ஆய்வு செய்யவேண்டும். எனினும், எவ்வளவு ஆழத்திற்கு இந்த தேடுதல் நடத்தப்படவேண்டும் என்பது தெரியவில்லை.
கடல் படுகை பகுதிகளில் விமான பாகங்களை தேடுவதற்காக அதிநவீன சாதனங்களை டெண்டர் முறையில் வாங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு இன்னும் 2 மாதங்கள் ஆகும். இந்த இடைப்பட்ட காலத்தில் இன்னும் எவ்வளவு தூரத்திற்கு தேடுதலை நடத்தவேண்டும் என்பது திட்டவட்டமாக தெரிந்துவிடும்.
துல்லியமான தேடுதல் வேட்டை
இருந்தபோதிலும், தற்போது தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள புளூபின்–21 தானியங்கி நீர்மூழ்கி ரோபோட் தொடர்ந்து ஆழ்கடல் பகுதியை ஆய்வு செய்யும்.
இதுவரை தேடுதல் நடத்தப்பட்ட பகுதிகளில் சேகரித்த புள்ளிவிவரங்களை தொகுத்து வருகிறோம். அவற்றில் எங்காவது குறைபாடு நடந்திருக்கிறதா? என்பது குறித்து ஆய்வும் செய்யப்படும். இதன் அடிப்படையில் கடலுக்கு அடியில் அடுத்த கட்ட தேடுதல் பணி இன்னும் துல்லியமாக நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

E-Duke bike launch confirmed