பெங்களூர்,
ரஜினிகாந்த் நடிக்கும் லிங்கா படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலம்
மண்டியா மாவட்டம் மேல்கோட்டையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.ரஜினிகாந்த் புதிய படம்
ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் திரைப்பட வேலைகள் முடிவடைந்து வரும் 9-ந்தேதி திரையிடப்படுகிறது. இதனைத் தொடர்ந்து புதிய படத்தில் நடிக்க ரஜினிகாந்த் முழுவீச்சில் ஈடுபட்டு உள்ளார். அவர் இரட்டை வேடத்தில் நடிக்கும் அந்த படத்துக்கு லிங்கா என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார். கதாநாயகிகளாக சோனாக்ஷி சின்காவும், அனுஷ்காவும் நடிக்கின்றனர்.கடந்த வெள்ளிக்கிழமை லிங்கா படத்துக்கான பூஜை மைசூர் சாமுண்டீஸ்வரி கோவிலில் நடைபெற்றது.
மண்டியாவில் படப்பிடிப்பு
இதை அடுத்து, லிங்கா படத்தின் படப்பிடிப்பு மண்டியா மாவட்டம், மேல்க்கோட்டையில் முறைப்படி தொடங்கியது. அங்கு பிரசித்திபெற்ற யோக நரசிம்மசாமி கோவிலின் பின்புறம் உள்ள மலைப்பகுதியில் படப்பிடிப்பு நடந்தது.ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிக்கும் சோனாக்ஷி சம்பந்தப்பட்ட காட்சிகள் அப்போது படமாக்கப்பட்டன.
படப்பிடிப்பை பார்த்தார்
படப்பிடிப்பு தளத்துக்கு ரஜினிகாந்த் வந்திருந்தார். ஆனால் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவில்லை. இதனால் அவர் ஓரிடத்தில் அமர்ந்து படப்பிடிப்பை பார்த்தார்.
படப்பிடிப்பை காணவும், ரஜினிகாந்தை பார்க்கவும் உள்ளூரில் இருந்தும், பெங்களூர் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான ரசிகர்கள் மேல்கோட்டையில் குவிந்திருந்தனர்.
பலத்த போலீஸ் பாதுகாப்பு
கர்நாடக மாநிலம் ராமநகரில் நேற்று ரஜினிகாந்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். காவிரி பிரச்சினையில் ரஜினிகாந்த் கன்னடர்களுக்கு எதிராக பேசியதாக கூறி அதற்கு கண்டனம் தெரிவித்து உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், லிங்கா படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் மேல்கோட்டையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அவர்கள் கூறினார்கள்.இதன் எதிரொலியாக லிங்கா படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment